Saturday, November 12, 2016

பங்குசந்தையும், உங்களுடைய புரிதலும்

அனைவருக்கும் வணக்கம். இது தான் என்னுடைய முதல் பதிப்பு. தவறு இருந்தால் திருத்திக்கொள்கிறேன். தப்பு இருந்தால் மாற்றிகொள்கிறேன். இங்கு பதிவிடும் அனைத்து தகவல்களும், நான் தேடி, தேடி கற்றுகொண்டது.

நாம் அனைவருமே மிகப் பெரிய புண்ணியம் செய்துள்ளோம். ஏன் தெரியுமா? நமக்கு தமிழ் மொழி தெரியும். தமிழ் மொழி என்பது நேற்று இன்று அல்ல, பல நூறு அல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய மொழி என்று இந்த உலகில் உள்ள அனைத்து தொல்லியல் அறிஞர்களாலும் ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு மொழி. பல அறிய நூல்கள் நம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளன. ஆனால் அவற்றை நாம் படிப்பதும் இல்லை, அதில் கூறியவற்றை கடைபிடிப்பதும் இல்லை. நான் ஏன்  இப்படி கூறினேன் என்று இந்த கட்டுரையின் முடிவில் தெரியும். சரி நாம் நம் வேலையை பார்ப்போம்.

பங்குசந்தையும், உங்களுடைய புரிதலும்

       இந்த தலைப்பு  ஏன்? நம்மில் பலர் பங்குசந்தையில் பணம் போட்டால் விரைவில் பணக்காரர்களாக மாறிவிடலாம் என்று யாரோ ஒருவர் கூறுவதை கேட்டு, தினம் தினம் பல ஆயிரம் ஏன் பல லட்சங்களை முதலீடு செய்து கொண்டு உள்ளார்கள். எனவே அவர்களுக்காக இந்த பதிவு.

யானையும் ஆறு குருடர்களும் என்ற ஒரு கதையைப் பார்ப்போம். 




 யானை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பிய, ஆறு குருடர்களுக்கு முன்பாக ஒரு யானை நிறுத்தப்படுகிறது. ஒவ்வொரு குருடராக சென்று அதை தடவிப்பார்த்துவிட்டு, தங்கள் தொடுதல் மூலம் யானை என்றால் என்ன என்று வரையறுத்துக்கொள்கிறார்கள்.

  1. யானையின் அகன்ற மார்பைத் தடவிப்பார்த்த மனிதன், யானையை ஒரு பெரிய சுவர் என்று சொல்கிறான். 
  2. அதன் தந்தத்தைத் தடவிப்பார்த்த மனிதன், அதை ஒரு கூர்மையான் ஈட்டி என்று சொல்கிறான். 
  3. அதன், தும்பிக்கைப் பகுதியைத் தடவிப்பார்த்த மனிதன் அதை ஒரு பாம்பு என்று சொல்கிறான். 
  4. அதன் கால் பகுதியைத் தடவிப்பார்த்த மனிதன், அதை தூண் என்று வர்ணிக்கிறான். 
  5. அதன் காது பகுதியைத் தடவிப்பார்த்த மனிதன், யானையை முறம் என்று வர்ணிக்கிறான். 
  6. கடைசியாக, அதன் வால் பகுதியைத் தடவிப்பார்க்கும் மனிதன், அதை ஒரு கயிறு என்று வர்ணிக்கிறான். 

            எல்லோருடைய யானை பற்றிய புரிதல்களும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சரியே. ஆனால், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் முழுமையின்மையே, அவர்களின் யானை் பற்றிய வரையறைகள் தவறாகிப் போனதற்குக் காரணம்.

             இதில் யானையும், பங்குசந்தையும் ஒன்றே. ஒருவருக்கு கொடுக்கப்பட்ட அரை குறை தகவலை வைத்துக் கொண்டு எவ்வாறு பங்குசந்தையில் வெற்றிபெற முடியும்.

           அரைகுறை உண்மை முழு சித்திரத்தைக் காட்டாது. வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து முடிவுக்கு வரக்கூடாது. உண்மை என்பது மிகப் பெரியது. நாம் காண்பதெல்லாம் ஒரு சிறு பகுதியே.

இதை திருமூலர் அன்றே நமக்கு நூல்களின் வாயிலாக திருமந்திரமாக சொல்லிவிட்டார்.

முதலொன்றாமான் ஆனை முதுகுடன் வாலும்
இதமுறு கொம்பு செவி துதிக்கை கான்
மதியுடன் அந்தகர் வகை வகை பார்த்தே
அதுகூறல் ஒக்கும் ஆறு சமயமே  (திருமந்திரம்-- 1507)

ஆனால் நமக்கு தான் படிக்க நேரம் என்பதே கிடையாதே. இப்பொழுது புரிகிறதா நமது தமிழ் நூல்களின் சிறப்பு.

           தமிழ் நூல்களை கொண்டு எந்த காலத்திலும்,  எந்த செயலுடனும் ஒப்பிட்டு, கருத்துக்களுடன் விளக்கம் தர இயலும். வேறு எந்த மொழியும் இதைப்போன்ற நூல்கள் உள்ளனவா என்று தெரியவில்லை.

(1) ஒரு நிகழ்வுக்கு காரணி என்ற ஒன்று பற்றிய புரிதல் இல்லாத வரை தான், அது மிகப் பெரிய விசயமாக தெரிகிறது.

ஒரு காலகட்டத்தில், தாமாகவே ஆடிய மரங்கள் ஒரு அமானுஷ்ய விசயமாக இருந்திருக்கலாம். காலப்போக்கில், காற்று என்ற கண்ணுக்குப் புலப்படாத ஒன்று பற்றிய உணர்தல், இந்த நிகழ்வை ஒரு இயற்கையான, சாதாரண நிகழ்வாக மாற்றிவிட்டது. 

பங்குசந்தையும் வெளியில் இருந்து பார்த்தால் மிகப் பெரியதாக தெரியும். ஆனால் முழுமையான தகவல்களுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயமே!

(2) நம் இளவயதில், நாம் எந்த மாதிரியான தகவல்களை எப்படி சேர்க்கிறோம் என்பது, மிக முக்கியமான விசயம். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது மிகவும் பொருத்தமான பழமொழி இந்த இடத்தில்.

(3) ஒரு விசயம் பற்றிய மிகச் சரியான முடிவு எடுப்பதற்கு, அது பற்றிய முழு தகவலும் அவசியம். ஆனால், ஒன்று பற்றிய முழு தகவல் என்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. அதாவது, ஒரு குருடனுக்கு, யானை பற்றிய முழு அறிவையும் கொடுக்க இயலுமா?


 நமது பரமஹம்சர் சொன்ன  மற்றொரு கதை 

“இரண்டு பேரிடையே பச்சோந்தியின் நிறம் பற்றிக் காரசார வாக்குவாதம் நடந்தது.
ஒருவன் பனைமரத்தின் மீதிருந்த பச்சோந்தியின் நிறம் சிவப்பு என்றான். மற்றவனோ, இல்லை பச்சோந்தியின் நிறம் நீலம் என்றான். இருவரும் மரத்தடியிலேயே வசிக்கும் ஒருவனிடம் சென்று சந்தேகத்தைத் தெளிய கேள்வி கேட்டனர்.
முதலாமவன் ‘’பச்சோந்தி சிவப்பு நிறம் உடைய பிராணிதானே’’ என்று கேட்டவுடன் ‘’ஆமாம், சிவப்புதான்’’ என்றான்.
 இரண்டாமவன் அதை மறுத்து ‘’இல்லை நீல நிறம்தானே’’ என்றவுடன் ‘’ஆமாம், நீல நிறம்தான்’’ என்றான்.
பச்சோந்தியின் நிறம் அடிக்கடி  மாறும் என்பது அவனுக்குத் தெரியும்.

இதை போலவே பங்குசந்தையும் ஏற்ற, இறக்கங்களை கொண்டது தான். பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்து வெற்றி பெற்றவர்கள், பங்குசந்தை மிக சரியானது என்று சொல்வார்கள், பங்குச்சந்தை இறக்கத்தில் இருந்து தோல்வி அடைந்தவர்கள் பங்குசந்தை வேண்டாம் என்பார்கள்.

ஆனால் நமக்கு தெரியும் ஏற்ற, இறக்கங்களை கொண்டது தான் பங்குச்சந்தை என்று.

எனவே பங்குச்சந்தை பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்துகொண்டு, பாதுக்காப்பாக வெற்றி பெற  ஆண்டவனை வேண்டிக்கொள்வோம்.

No comments:

Post a Comment